இலங்கையில் LGBTIQA நபர்கள் தொடர்பான சட்டங்கள்
LGBTIQA என்பது வெவ்வேறு பாலின அடையாளங்கள் மற்றும் வெவ்வேறு பாலியல் நோக்குநிலைகளைக் கொண்டவர்கள். அதாவது
L – Lesbian
G – Gay
B – Bisexual
T – Transgender
Q – Queer
I – Intersex
A – Asexual
இலங்கையில் இதனைப் பற்றி பொதுவெளியில் பேசுவதற்கு சிலர் தடை விதித்துள்ள போதிலும், தற்போது இந்த விடயம் மிக முக்கிய விடயமாக மாறியுள்ளது. ஆனால் நவீன காலத்தில், LGBTIQA நபர்கள் தொடர்பான சட்டக் கட்டமைப்பைப் பற்றி மக்களுக்கு போதிய அறிவில்லை என்பதுடன், LGBTIQA தொடர்பான சட்ட கட்டமைப்பில் நிரப்பப்பட வேண்டிய பல இடைவெளிகள் காணப்படுகின்றன.
இந்த நிலையில் தற்போது நாங்கள் LGBTIQA நபர்கள் தொடர்பான இலங்கையின் சட்டங்கள் என்ன என்பது குறித்து ஆராய்வோம்.
இலங்கையில் குற்றவியல் சட்டம் தொடர்பான ஏற்பாடுகள், 1883 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க இலங்கை தண்டனைச் சட்டம் மற்றும் 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் வழக்கு நடைமுறைச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
தண்டனைச் சட்டக்கோவை 365 ஆம் பிரிவுக்கு அமைய,
யாரோ ஒரு மனிதன், இயற்கைக்கு எதிராக பெண்ணுடனோ அல்லது விலங்குடனோ தனது விருப்பதற்கு அமைய உடலுறவில் ஈடுபட்டால் அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படுவதுடன், அவருக்கு அபராதமும் விதிக்கப்பட வேண்டும்.
குற்றவியல் சட்டத்தின் பிரிவு 365 (அ) பிரிவுக்கு அமைய,
ஒரு மனிதன் பகிரங்கமாகவோ அல்லது தனிப்பட்ட முறையில் மற்றொரு மனிதனுடன் மிக மோசமான அநாகரீகமான செயலைச் செய்தாலோ அல்லது அத்தகைய செயலில் ஒரு பங்காளியாக இருந்தாலோ அல்லது அத்தகைய செயலை செய்ய ஒருவரை கட்டாயப்படுத்தினாலோ அல்லது அத்தகைய செயலை செய்ய முயற்சிக்கும் ஒருவர் குற்றவாளியாவார். அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டு தண்டணைகளும் வழங்கப்படும்.
ஆனால் இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் இயற்கைக்கு எதிரானது மற்றும் மோசமான அநாகரீகமான செயல் என்றால் என்ன என்று தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை.
1995 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க இலங்கை தண்டனைச் சட்டக்கோவை (திருத்தம்) சட்டத்தின் படி,
365 ஆம் பிரிவு
18 வயதிற்கு மேற்பட்ட ஒருவர் 16 வயதிற்கு குறைந்த ஒருவருக்கு எதிராக குற்றம் செய்தால், அவருக்கு பத்து ஆண்டுகளுக்கு குறையாத மற்றும் இருபது ஆண்டுகளுக்கு அதிகரிக்காத வகையில் கடூழிய சிறைத்தண்டனை மற்றும் அபராதமும் விதிக்கப்படும். மேலும், ஏற்பட்ட சேதத்திற்கு இழப்பீடாக நீதிமன்றம் நிர்ணயித்த தொகையை வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட முடியும் எனவும் திருத்தப்பட்டுள்ளது;
அத்தோடு, 365(அ) பிரிவுக்கு அமைய, ‘மனிதன்’ என்ற சொல் ‘ஒரு குறிப்பிட்ட நபர்’ என வெவ்வேறு பாலின நோக்குநிலைகளைக் கொண்ட நபர் என்ற பொருளில் திருத்தப்பட்டுள்ளது.
மேலும் அந்தப் பகுதியில்,
16 வயதிற்கு குறைந்த ஒருவருக்கு எதிராக 18 வயதுக்கு மேற்பட்ட ஒருவர் அந்தக் குற்றத்தைச் செய்தால், பத்து ஆண்டுகளுக்குக் குறையாத மற்றும் இருபது ஆண்டுகளுக்கு அதிகாரிக்காத வகையில் கடூழிய சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும். ஏற்பட்ட சேதத்திற்கு இழப்பீடாக நீதிமன்றம் நிர்ணயித்த தொகையை வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிடலாம் என திருத்தப்பட்டுள்ளது
LGBTIQA நபர்களை கைது செய்வதற்கும் தடுத்துவைப்பதற்கு தண்டனைச் சட்டத்தின் 352 மற்றும் 353 பிரிவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
352 ஆம் பிரிவின் படி,
ஆணாக இருந்தால் 14 வயதிற்கு குறைந்த அல்லது பெண்ணாக இருந்தால் 16 வயதிற்கு குறைந்த வயதுக்குட்பட்டவர்கள் அல்லது மனநலம் குன்றியவரின் குறைந்த வயதுக்குட்பட்டவர் அல்லது மனநலம் குன்றியவரின் பாதுகாவலரின் காவலில் இருந்து பாதுகாவலரின் அனுமதி இன்றி யாரேனும் அழைத்துச் சென்றாலோ அல்லது அழைத்துச் செல்ல முயற்சித்தாலோ மனநலம் குன்றியவர் மற்றும் குறைந்த வயதுடையோர் சட்டப்பூர்வ பாதுகாவலில் இருந்து பறிக்கப்பட்டவர்களாக கருதப்படுவார்கள்
உதாரணமாக, ஓரினச்சேர்க்கைப் பெண்ணுக்கு எதிராக இரு பெண்களில் ஒருவர் 18 வயதிற்கு குறைந்தவராக இருக்கும்போது தம்பதியரை அச்சுறுத்துவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.
353 பிரிவின் படி,
எந்தவொரு நபரும் எந்தவொரு நபரையும் எந்தவொரு இடத்திலிருந்தும் வலுக்கட்டாயமாகவோ அல்லது ஏதேனும் மோசடியான முறையிலோ அல்லது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தோ அல்லது வேறு ஏதேனும் வற்புறுத்தலின் ஊடாகவோ அழைத்துச் செல்ல முயற்சித்தால் அவர் அந்த நபரை கடத்திச் சென்றதாக கருதப்படுவார்.
உதாரணமாக, பெண்கள் தங்களுடைய வீட்டை விட்டு தப்பிச் செல்லும் சந்தர்ப்பங்களில் இது பயன்படுத்தப்படுகிறது.
விக்கிரமசிங்க எதிரிவ கிங் வழக்கில், 16 வயதிற்கு குறைந்த குழந்தையை பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பான சம்பவத்தில் குற்றவாளி மீது மோசமான அநாகரீக குற்றச்சாட்டை முன்வைக்கப்பட்டுள்ளது.
தலுவத்த எதிரிவ அமரசிங்க வழக்கில், இராணுவ உறுப்பினர் ஒருவருக்கு எதிராக ஓரினச்சேர்க்கை குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட போதிலும், நீதிமன்றம் ஓரினச்சேர்க்கை அம்சங்களை கவனத்தில் கொள்ளாது நடைமுறை விதிமீறலின் அடிப்படையில் வழக்கை தள்ளுபடி செய்தது.
வெவ்வேறு பாலின அடையாளங்கள் மற்றும் வெவ்வேறு பாலின நோக்குநிலைகளைக் கொண்ட மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பாக தண்டனை சட்டக் கோவையில் போதுமான வசதிகள் இல்லாத காரணத்தினாலும் அதற்கு அதிக ஆதரவு இல்லை என்பதாலும் அவர்கள் இலங்கையின் சட்டத்தில் பல துன்புறுத்தலுக்கு முகம் கொடுக்கும் சம்பவங்கள் அதிகமாகும்.
உதாரணமாக, சட்டத்தின் ஊடாக உடல் ரீதியான துஷ்பிரயோகம், மன ரீதியான துஷ்பிரயோகம் மற்றும் பாகுபாடு, LGBTIQA நபர்களை மனநோயாளிகளாக நடத்துவது மற்றும் குழந்தை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு எதிராக பாதுகாப்பை வழங்கத் தவறியது போன்றவற்றை எடுத்துக்காட்டலாம்.
இலங்கை தண்டனைச் சட்டக்கோவையின் விதிகளால் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஒடுக்கப்பட்ட நபர்களின் சட்ட உரிமைகளைப் பாதுகாப்பதற்கான பயன்படுத்தப்பக்கூடிய வேறு சட்ட ஏற்பாடுகள் என்ன என்பதை எதிர்வரும் நாட்களில் பார்க்கலாம்.
குறிப்பு: சட்டக்கல்லூரி மாணவி துஷ்மந்த நிரோஷினி